“ஒரே தேசம் ஒரே தேர்வு” என்பது அரசியல் மோசடி – சு.வெங்கடேசன் எம்பி பேச்சு!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மதுரை திமுக சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சு.வெங்கடேசன் எம்பி, CBSE ஒரே நிறுவனம், ஒரே பாடத்திட்டம். அதாவது, சிபிஎஸ்இ பள்ளிக்கு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம். ஆனால் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி என ஐந்து மண்டலத்திற்கும் ஐந்து வகையான தேர்வு நடத்துகிறது மத்திய அரசு. இந்த மண்டலத்திற்கும் 5 விதமான தேர்வு தாள்கள், 5 விதமான தேர்வுகளை CBSE நடத்துகிறது.
ஒரே கல்வி நிறுவனம், ஒரே தேர்வு கிடையாது 5 விதமான தேர்வுகளை நடத்துகிறது. ஆனால், இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்களில், வெவ்வேறு கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு நீட் என்ற ஒரே தேர்வு மட்டுமே நடத்துவோம் என்று மத்திய அரசு சொல்வது அப்பட்டமான தாக்குதல். எனவே, “ஒரே தேசம் ஒரே தேர்வு” என்பது அரசியல் மோசடி. இது ஒரு திட்டமிட்ட சதி என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.