கேரளா ஏ.டி.எம் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்.! ஒருவர் உயிரிழப்பு.!
நாமக்கல் குமாரபாளையம் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது நடந்த என்கவுண்டரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை : இன்று காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்தி பிடிக்க முற்படுகையில், அந்த லாரியில் இருந்தவர்கள் காவல்துறையினர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினர் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு வடமாநில கும்பல் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுப்பட்டு அங்கிருந்து கோவை வழியாக தேசிய நெடுசாலையில் பயணித்து வடமாநிலம் தப்ப முயன்றுள்ளது. அப்போது ஈரோடு – சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் , அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் , அதிரடிப்படையினர், பொதுமக்கள் உதவியுடன் இணைந்து அந்த கண்டெய்னர் லாரியை துரத்தியுள்ளனர். துரத்தி சென்று நாமக்கல் குமாரபாளையம் அருகே கண்டெயினரை தடுத்து நிறுத்தி கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.
பின்னர், அந்த லாரியின் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கையில் , அதனுள்ளே ஒரு சொகுசு கார் இருந்ததும், அதிலும் கொள்ளையர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர், அவர்களை பிடிக்க முற்படுகையில் , பயங்கர ஆயுதங்களால் காவல்துறையினரை ஒரு கொள்ளையன் தங்கியுள்ளான்.
இதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக அந்த கொள்ளையனை சுட்டுள்ளார். இந்த என்கவுண்டரில் அந்த கொள்ளையன் உயிரிழந்துவிட்டான். மேலும் ஒரு கொள்ளையனுக்கு காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.
காயமடைந்த காவலர்கள் நாமக்கல் பள்ளிபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் , அவர்கள் கேரளா ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சம்பவ இடத்தில் சேலம் சரக ஐஜி உமா மற்றும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணா ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள், “சம்பவம் குறித்து மருத்துவமனை சிகிச்சையில் உள்ள காவலர்களை விசாரித்த பிறகு தான் இங்கு என்ன நடந்தது.? எந்த சூழலில் என்கவுண்டர் நடைபெற்றது என்ற முழு விவரம் தெரியவரும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.