ஒன்று தமிழன், மற்றொன்று திராவிடம்.. இது இல்லாமல் அரசியல் நடத்த முடியாது – முதல்வர்
தமிழநாட்டு அரசியலை பொறுத்தளவில் இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது என முதல்வர் பேரவையில் பேச்சு.
அயோத்திதாசப் பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்போது பேசிய முதலமைச்சர், தமிழநாட்டு அரசியலை பொறுத்தளவில் இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது என தெரிவித்தார்.
அதாவது, ஒன்று தமிழன், மற்றொன்று திராவிடம் என்ற இரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாள சொற்களாக மாற்றி, அறிவாயுதம் ஏந்தியவர் தான் அயோத்தி தாசப் பண்டிதர் என்று புகழாரம் சூட்டினார். 1981-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என பதிய சொன்னவர் பண்டிதர்.
1891-ஆம் ஆண்டு அயோத்திதாசர் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிட மகாஜன சபை என்றும் 1907ம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழை தொடங்கி, அதையே தமிழன் என்ற இதழாக நடத்தி வந்தவர் எனவும் கூறினார். பூர்விக சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்தவர் அவரே ஆவார்.
அதனால் தான் தமிழன், திராவிடம் ஆகிய இரு சொற்களையும் அறிவாயுதம் ஏந்தியவர் பண்டிதர் என்று குறிப்பிட்டேன் என முதல்வர் தெரிவித்தார். மேலும், அயோத்திதாசர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் தற்போது தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.