அமைச்சர் துரைக்கண்ணு மறைவு – ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்
அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
இந்நிலையில் இன்று காலை காவேரி மருத்துவ வளாகத்தில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் திருஉருவப்படத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதன் பின்பு அவரது உடல் சொந்த ஊரான ராஜகிரிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில் மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று சென்னை, தஞ்சாவூரில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.