ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய உத்தரவு.!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர்.
இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும், 1,300-க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், வாகனங்களை திரும்ப பெறும் பொதுமக்களிடம் 55 நாட்களுக்கும் வாடகை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அறிவுறுத்தலின் படி எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றிற்கு ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ. 50 , இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 , மிதிவண்டிகளுக்கு ரூ.15 என ஒருநாள் கட்டணத்தை மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.