“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடத்தத் தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை இக்குழுவினர் தயார் செய்தனர். மொத்தம் 18,626 பக்கம் கொண்ட அந்த அறிக்கையை ஜனாதிபதி முர்முவிடம், ராம்நாத் கோவிந்த் தலையாமையிலான 8 பேர் குழுவினர் நேரில் சென்று வழங்கினார்கள்.
அவர்கள் வழங்கி உள்ள அந்த அறிக்கையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த 100 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் , ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை ஊக்குவிக்கப்படும் எனவும் ஜனநாயக அடிப்படை கொள்கைகள் மேலும் வலுப்படும் எனவும் இந்தியாவின் பல கனவுகள் இதனால் நனவாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் “இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.