மாணவச் செல்வங்கள், ஆசிரிய பெருமக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

பட்ஜெட்டில் கல்வி, மருத்துவதுக்கு முக்கியத்துவம்:

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சுமார் 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில், கல்வி, மருத்துவம் என பல்வேறு சிறப்பம்சங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, உயர்கல்வித்துறைக்கு 5,668.89 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்றும் ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது, அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாணவிகளுக்கு ஊக்கத்தொகை:

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும் என்றும் அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட் உரையில் இடம்பெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ட்வீட்:

இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கும் மாணவச் செல்வங்கள், ஆசிரிய பெருமக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு புகழாரம்:

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கல்வியையும், மருத்துவத்தையும் தன் இரு கண்களாக பார்க்கிறார் என்பது இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்