- சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில்,
- அதை,உடனடியாக கைவிட வேண்டும் என்று ,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில்,அதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- “நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையை கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற குறிக்கோளை அடையும் வண்ணம், ஏராளமான சுகாதாரத்திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தீட்டி, நடைமுறைப்படுத்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
- அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிம், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான உரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வண்ணம், புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கியதோடு, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஏற்படுத்தினார்.
- மாண்புமிகு அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டிடம், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக்கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்தக் கட்டிடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டப்பேரவையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்துவிட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியையும் உருவாக்கினார். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.
- இதன்மூலம், ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவம் பயின்று, இந்த நாட்டின் சிறந்த மருத்துவர்களாக ஆகி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் இங்குள்ள பல துறை உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
- கொரோனா காலக்கட்டத்தில் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு, நல்ல சிகிச்சை பெற்று ,குணமடைந்து வீடு திரும்பினர். இந்த மருத்துவமனை அனைவரின் ஏகோபித்த ஆதரவினையும், பாராட்டினையும், வரவேற்பினையும் பெற்றுள்ளது.
- இந்தச் சூழ்நிலையில், கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்து,அதனை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்ததையடுத்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டிடம் மீண்டும் சட்டப்பேரவையாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன.
- இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது.
- அதிமுகவைப் பொறுத்தவரையில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனையை கிண்டி, கிங் வளாகத்தில் உருவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், சிறப்பாக, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் செயலட்டுக்கொண்டிருக்கின்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து கிங் மருத்துவ வளாகத்திற்கு மாற்றப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
- எனவே,தமிழக முதல்வர் அவர்கள்,இதில் உடனடியாக தலையிட்டு,ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.