ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி முதல்வருக்கு அளித்த பரிசு – நம்பிக்கை அளித்த முதல்வர்..!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி இன்று முதல்வரை சந்தித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி,துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார்.ஏனெனில்,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.

முதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி,இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனோன் ப்ருநட்டிடம் 15 -7 என்ற கணக்கில் தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.இதற்காக,அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில்,தமிழகம் திரும்பிய வீராங்கனை பவானி தேவி இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பவானி கூறியதாவது:

முதல்வர் அளித்த நம்பிக்கை:

“நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று முதல்வர் என்னை பாராட்டினார்.அதுமட்டுமல்லாமல்,நாங்கள் போட்டியில் கலந்து கொள்வதற்காக,டோக்கியோ செல்வதற்கு முன்னதாக இரு முறை நேரில் வந்து,எல்லோருக்கும் வாழ்த்து கூறி,தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக நம்பிக்கையையும் அளித்தார்.

பெருமை:

நான் முதல்முறையாக ஒலிம்பிக்கில் வாள்சண்டை போட்டியில் பங்கேற்றேன்,குறிப்பாக,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் வாள்சண்டை போட்டிக்கு முதல் முறை நான் சென்றது தமிழகத்திற்கும் ,இந்தியாவிற்கும் பெருமை அளிக்கும் விதமாக இருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அடுத்ததாக,எனது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவு அளித்தார்கள்.குறிப்பாக,என் அம்மா,எனக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள்.இதற்காக,முதல்வர் எனது அம்மாவையும் பாராட்டினார்.

நான் முதல்வருக்கு அளித்த பரிசு:

இந்தியா சார்பாக முதல் முறை ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாள் என்பதால்,முதல்வருக்கு எனது வாளை பரிசாக அளிக்க நினைத்தேன். ஆனால்,நீங்கள் அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட இந்த வாள் உங்களுக்கு தேவைப்படும் என்றுகூறி  அதனை முதல்வர் எனக்கே பரிசாக திருப்பி கொடுத்து விட்டார்.மேலும்,உங்களுக்கு இன்னும் நிறைய உதவிகளை தமிழக அரசு செய்யும்.அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட அரசின் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.

அதன்பிறகு,விளையாட்டுதுறை அமைச்சரை சந்தித்த போது அவர் என்னையையும்,அம்மாவையையும் பாராட்டினார்.

நான் மின்சாரத்துறையில் பணியாற்றுவதால்,அதைப் பற்றியும் முதல்வர் என்னிடம் விவரம் கேட்டார்.மேலும்,மின்சாரத்துறை அமைச்சரையும் நாங்கள் அடுத்து சந்திக்க உள்ளோம்.

காரணம்:

நான் இந்த அளவுக்கு சென்றதற்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு தான் காரணம்,அதில் வரும் ஸ்காலர்ஷிப் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியின் ஆதரவு எனக்கு மிகவும் ஆதரவு அளித்தது.

நிறைய பதக்கங்கள் கொடுப்பேன்:

அதனால்தான்,நிறைய வெளிநாட்டு பயிற்சிகளுக்கு சென்று நான் ஒலிம்பிக்கில் பங்கேற்று,முதல் போட்டியில் வென்று,இரண்டாவது போட்டியிலும் டௌப் கொடுக்க முடிந்தது.இந்த உதவி தொடர்ந்து கிடைத்தால் நான் கண்டிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் வென்று நிறைய பதக்கங்களை நாட்டிற்கு பெற்று கொடுப்பேன் “,என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா :

இதனையடுத்து,முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் உங்களை எவ்வளவு ஊக்கப்படுத்தினார்கள்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பவானி தேவி,”அவர்களும் விளையாட்டுக்கு நிறைய ஆதரவு அளித்தார்கள்,அவர்கள் இருந்தபோது அவர்கள் ஆதரவும் எனக்கு கிடைத்தது”,என்று தெரிவித்தார்.

பதவி உயர்வு:

மேலும்,பதவி உயர்வு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,பதில் அளித்த பவானி தேவி கூறியதாவது:”ஒலிம்பிக்கிற்கு செல்லும்போது பதவி உயர்வு என்பது இயல்பாகவே கொடுப்பார்கள்,அதுவும் குறிப்பாக முதல்முறையாக சென்றால்,இன்னும் நல்ல பதவியாக கொடுப்பார்கள்,அதை நான் எதிர்பார்க்கிறேன்.ஏனெனில்,எனக்கு பிற மாநிலங்களிலிருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது.ஆனால், நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்.அதனால் நான் பதவி உயர்வு குறித்து ,கண்டிப்பாக நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகிறேன்”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்