இன்று முதல் தமிழகத்தில் ‘இந்த’ 36 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு.!
டோல்கேட்: இந்தியா முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணிகளானது டோல்கேட் கட்டண வசூல் வாயிலாக ஒப்பந்ததாரர் முறைப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டண உயர்வானது மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படும்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணமானது தேர்தல் நேரம் என்பதால் செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில் இன்று (ஜூன் 3) சுங்க கட்டண உயர்வு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க பல்வேறு சுங்க சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு 12 முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில், பரகனூர், ஆத்தூர், மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம் காரியந்தல் , தென்னமாதேவி, கிருஷ்ணகிரி, கயத்தாறு, கப்பலூர் உள்ளிட்ட 36 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஒரு முறைக்கான கட்டணத்தில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர பாஸ் கட்டணமும் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.