“வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் முத்துவின் உடலில் காயங்கள் இருந்தது”- நீதிபதி!
தென்காசியில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் உயிரிழந்த முத்துவின் உடலில் காயங்கள் இருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் கடந்த 22-ம் தேதி வனத்துறையினர் தாக்கி விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் மகன், கடந்த 23-ம் தேதி ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த முத்துவின் உடலை மறுகூராய்வு செய்ய அவரின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண தொகையும், தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.