அடுத்த 3 நாட்களில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு – எல் முருகன்
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் பேட்டி.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பொது மக்களிடமிருந்து தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து பெறப்பட்டது. இதுபோல மாநிலம் முழுவதும் 50 லட்சம் பேரிடமிருந்து அக்கட்சியால் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கையெழுத்து தொகுப்பை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் சந்திப்பு முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்வதாகவும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மையை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையின் தேவை குறித்து 50 லட்சம் கையெழுத்து பிரதிகள் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தலைமை யார்? ஆட்சியில் பங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.