ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குக.., திமுக கூட்டணிக்குள் எழுந்த கோரிக்கை!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 இல்லை என்ற அறிவிப்பு மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

pongal 2025 gift

சென்னை : 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. ஆனால், வழக்கமாக வழங்கப்படும் ரூ.1,000 குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி  கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ” வரும் 2025 தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளில் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் ரொக்கத் தொகை குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் “ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த வரும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது” என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பாஜக ஒன்றிய அரசு கடந்த 2021 புதிய ஆட்சி அமைந்தது முதல் நிதி ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டி வருகிறது என்பதுடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது உண்மையாகும்.

இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழ்நாட்டில் நிவாரண பணிகளுக்கும், மக்கள் மறு வாழ்வை உறுதி செய்யவும் 2021 முதல் இதுவரை ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு ரூ.82 ஆயிரத்து 458 கோடி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிலையில், அது ரூ 276 கோடி மட்டுமே வழங்கியிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம் அளிக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

இவ்வளவு பெரிய நிதிச் சுமையை, கழுத்தை முறிக்கும் நிதி நெருக்கடி நிலவும் நிலையிலும், புதிய நிதிச் சுமைகளை தமிழ்நாடு அரசே தாங்கி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள். நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு “தமிழ் முதல்வன்” திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.1000/=ம் அரசு நிதியுதவி செய்து வருகிறது.

இப்படி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு பொங்கல் திருநாளில் பரிசுத் தொகுப்புடன் மட்டுமே நிறுத்திக் கொள்வது ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நிதியமைச்சரின் முடிவின் மீது மாண்புமிகு முதலமைச்சர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ.1000/= வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது” என இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்