செங்கல் சூளையில் தினம் 30 ரூபாய் சம்பளத்திற்கு சிக்கிய தொழிலாளர்கள்.! தைரியமாக மீட்டெடுத்த 19 வயது இளம்பெண்.!

Default Image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் சிக்கியிருந்த சுமார் 6,750 வெளி மாநில தொழிலாளர்களை, ஒடிஸாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் மானசாவின் தைரியமான முயற்சியால் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இளம்பெண் மானசி : ஒடிசா மாநிலம் பாலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் மானசி, தனது தாயின் சிகிச்சைக்காக தந்தை வாங்கிய 28 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்காக தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.

செங்கல் சூளையில் வேலை : அங்கு, செங்கல் சூளையில் வேலை வாங்கி தருவதாக இடைத்தரகர் ஒருவர் கூறியுள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் புதுபாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் அவர்கள் வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் ஒடிசாவின் வேலை இன்றி தவித்த தொழிலாளர்கள் பலர் செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அந்த செங்கல் சூளையில் அதிகாலை 4:30 மணிக்கு வேலை தொடங்கி விடுமாம். இரவு வரை தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டுமாம்.

 30 ரூபாய் சம்பளம் : இந்த வேலைக்கு வாரந்தோறும் சம்பளமாக 250 முதல் 300 ரூபாய் வழங்கப்பட்டது என மானசி கூறுகியுள்ளார். கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 30 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த கொடுமை சுமார் 6 மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் அங்குள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

ஆனால், செங்கல் சூளை உரிமையாளர் குறிப்பிட்ட நாட்களுக்குள் தாங்கள் சொல்லும் எண்ணிக்கையில் செங்கலை தயாரித்தால் மட்டுமே ஊருக்கு திரும்பி அனுப்புவோம் என கறாராக கூறியுள்ளார்.

அதையும் மீறி வேலைசெய்ய மறுத்து, மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சூளை உரிமையாளர் 50க்கும் மேற்பட்ட ஆட்களை கொண்டு கடுமையாக தாக்கினாராம். இதில் பலர் காயம் அடைந்ததாக மானசி கூறியுள்ளார்.

இளம்பெண் மானசியின் துணிச்சல் : இதனை கண்டு அதிர்ந்த இளம்பெண் மானசி, இந்த கொடுமைகள  வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்து தங்கள் ஊரிலுள்ள நண்பர்களுக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் சமூக வலைதளம் மூலம் அனுப்பியுள்ளார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது.

6,750 தொழிலாளர்கள்  மீட்பு : இதனை தொடர்ந்து, திருவள்ளூரில் செயல்பட்டு வந்த சுமார் 30 செங்கல் சூளைகளில் சிக்கியிருந்த வெளிமாநில இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு,  சுமார் 150 பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மூலம், 6,750 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார். இதில் மானசி சிக்கியிருந்த செங்கல் சூளையில் ஒடிஸாவை சேர்ந்த 355 பேரும் மீட்கப்பட்டனர்.

இதனை அடுத்து செங்கல் சூளை உரிமையாளர்கள் மீ து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது செங்கல் சூளையில் சிக்கி வேலை பார்த்து வந்த சுமார் 6,750 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்