அக்.14 மகளிர் உரிமை மாநாடு… சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி வருகை – திமுக எம்பி கனிமொழி அறிவிப்பு!

Dmk-Women-Conference

திமுக மகளிர் அணி சார்பில் அக். 14ம் தேதி சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் – பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அவர்தான், அரசு வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து சட்டமாக்கினார்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, “பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் “புதுமைப் பெண் திட்டம்”, “மகளிர் சுய உதவிக் குழுக்கள்”, “மகளிரை அர்ச்சகராக்கியது” என பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால மறதிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில், 2029ஆம் ஆண்டு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதுவும் நிச்சயமற்றதாக உள்ளது. எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக மகளிர் அணி சார்பில் வரும் 14ம் (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான தோழர் ஆனி ராஜா உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்