ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ட்வீட்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் மசோதா இயற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் ஜூன் மாதம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டம் தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து, வரும் 17-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி.
— O Panneerselvam (@OfficeOfOPS) October 8, 2022