உங்ககிட்ட யார் சொன்னது.? இபிஎஸ் குறித்த கேள்வி., ஓபிஎஸ் பரபரப்பு பதில்.!
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியானது எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக பிரிந்தது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் , எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து 2022இல் நீக்கப்பட்டனர்.
இதனை அடுத்து, நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வி அடைந்தது. 7 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து எடப்பாடி பழனிசாமி , தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தோல்வி குறித்து கலந்தாலோசித்து வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சில நிர்வாகிகள் குறிப்பாக தென்மாவட்ட நிர்வாகிகள் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், இபிஎஸ் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய போது, எங்களை அதிமுகவில் இணைக்க சொல்லி எடப்பாடி பழனிசாமியிடம் யார் சொன்னது.? அவரே கேள்வி கேட்டுக்கொண்டு அவரே பதில் கூறி கொள்கிறார்.
இந்த இயக்கம் பிளவுபட்டு இருப்பது ஜனநாயக சகதிகளுக்கு எதிராக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கு ஓர் முடிவு தெரியும். அதிமுக கட்சி தொண்டர்களை ஒன்றிணைக்க சின்னம்மா (சசிகலா) மேற்கொண்டுள்ள பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று இன்று செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.