கோவை, சென்னையை அடுத்து கடைசி இடத்தில் மதுரை.! திமுக அரசு மீது ஓபிஎஸ் கடும் கண்டனம்.!  

Default Image

10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மை நகரங்களின் பட்டியலில் மொத்தம் 45 இடங்களில் 42வது இடத்தில் கோவை, 44வது இடத்தில் சென்னை, 45வது இடத்தில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து,  ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 மத்திய அரசின் சார்பில் தூய்மை நகரங்கள் பற்றிய வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதில், ‘ சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தூய்மை இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்துதான் தூய்மை இந்தியா திட்டம் மத்திய  அரசால் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

ஆனால், இதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது உள்ளாட்சி அமைப்புகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையினை மத்திய அரசு வெளியிட்டது.

இதில், பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இடையிலான தூய்மை நகரங்கள் போட்டியில், மொத்தம் 45 நகரங்கள் இடம் பெற்றதாகவும், இதில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு உள்ளாட்சி அமைப்பும் இடம்பெறவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னையில் இடங்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால், சுகாதார கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும். இதன்மூலம், மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். இது நாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. டெண்டரில் தான் தூய்மை கடைபிடிக்கப்படுவதில்லை. தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்