எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர் கேப்டன் விஜயகாந்த்- ஓ.பன்னீர்செல்வம்..!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர்,செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர், அனைத்து மக்களிடம் அன்பாக பழகி பழகக் கூடியவர், ஏழை எளிய மக்கள் மீது பண்பும், பாசமும் கொண்டவர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் வந்து தனது கடின உழைப்பால் நடிப்பு துறையில் மிக உயர்ந்த இடத்திற்கு வந்தார்.
மேலும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி அதை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உயர்வு பெற்றவர். நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து அனைத்து நடிகர் மத்தியில் நல் மதிப்பை பெற்றவர். விஜயகாந்த் அவர்களுடைய மறைவிற்கு எங்களுடைய கழக உரிமை மீட்பு குழுவின் சார்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் , அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.