ஆசிரியர் தகுதி தேர்வு.! போட்டிதேர்வின்றி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.! ஓபிஎஸ் அறிக்கை.!

Default Image

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டு என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அண்மையில்  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றிருந்தாலும், போட்டித்தேர்வு வைக்கப்படும் என்ற முடிவை கைவிட வேண்டும் எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கணக்கானோர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

தற்போது இது குறித்து, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.  அந்த தேர்தல் அறிக்கை பொய்யின் மறுஉருவம்.

இதற்கு ஒரு உதாரணம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி இன்னும் வழங்காதது. 2020 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.

 இதனைத் தொடர்ந்துதான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்து எந்த அறிவிப்பையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

ஆனால், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ‘ என அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்