மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.!
சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
2019 தேர்தலை போலவே இம்முறையும் நாவாஸ் கனி வெற்றி பெற்று இருந்தார். அவருக்கு ஆதரவாக 5,09,664 வாக்குகள் பதிவாகி இருந்தன. அவரை எதிர்த்து பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சுமார் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனியிடம் தோல்வியடைந்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். நவாஸ் கனி தேர்தல் பத்திரத்தில் தனது சொத்துக்களை முறையாக குறிப்பிடவில்லை என்றும், அதனால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரியும் வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதா போன்ற அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.