டானா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள சூழலில், 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை டானா புயலாக வலுப்பெறும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கும் எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதி :
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன்படி, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.