“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!
விஜய் இப்தார் நோன்பு நிகழ்வில் கலந்து கொண்டதால் நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அதனால் விமர்சிக்க வேண்டியதில்லை என சீமான் கூறியுள்ளார்.

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டார். அன்று மாலை 6 மணியளவில் வெள்ளை சட்டை, வெள்ளை லுங்கியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு பின் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு துறந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய விஜய், ” அன்பையும் சமாதானத்தையும் போதித்த நபிகள் நாயகம் வழியில் மனிதநேயத்தையும் சகோதரத்தையும் பின்பற்றும் இஸ்லாமிய நண்பர்கள், எனது அழைப்பை ஏற்று நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்றதற்கு அனைவருக்கும் நன்றி” என அரசியல் எதுவும் பேசாமல் சென்றார்.
இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சீமான், இதனை பெரியதாக விவாதிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்க அப்படி செய்வது இல்லை. எனக்கு நிறைய இஸ்லாமிய சொந்தங்கள் இருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கே நோன்பு கஞ்சி கொண்டு வந்து கொடுப்பார்கள். ஒருநாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் அல்ல. நான் ஒருநாள் இஸ்லாமியன் அல்ல. நான் மக்களின் உணவுக்கானவன் அல்ல. அவர்களின் உணர்வுக்கானவன். நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு தொப்பி போட்டு போட்டோ எடுத்த ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் நான் காட்டவா?
தம்பி அதனை செய்ய விரும்புகிறார் செய்கிறார் அவ்வளவு தான். அதனை விமர்சிக்க வேண்டியதில்லை. அது அவருடைய பாணி. விஜய் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டதால் தான் விலைவாசி உயர்ந்துவிட்டது, நாட்டில் மின்தடை ஏற்பட்டது என்று இருந்தால் அதனை பற்றி விவாதிக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் விவாதிக்க வேண்டியதில்லை. அவர் வந்தார் சாப்பிட்டார் சென்றார். அது அவர் விருப்பம். அதனால் நாட்டு மக்களுக்கு தீங்கு ஏற்பட்டதா இல்லையே., பிறகு விட்ருங்க..” என சீமான் தன்னுடைய பாணியில் இருந்து விலகி ‘சாஃப்ட்’ மோடில் விமர்சனம் செய்துள்ளார்.