தடையை மீறி போராட்டம்., சீமான் அதிரடி கைது!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி ஒருவர் கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே அதிமுக, பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பில் காவல்துறையினரிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. நாளை புத்தாண்டு என்பதால் பாதுகாப்பு பணிக்கு போதிய காவலர்கள் இல்லை என்பன உள்ளிட்ட சில காரணங்களை குறிப்பிட்டு இன்று போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இருந்தாலும், குறிப்பிட்ட இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது சமூக வலைதள பக்கத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனால், தடையை மீறி போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட உள்ளனர் என கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகி ஒருவரது இறப்புக்கு சென்றுவிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தற்போது வள்ளுவர் கூட்டத்திற்கு வந்தார். பின்னர் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.