தற்போது ஊழல், சாதி மத பேத அரசியல் – விஜய்..!
நடிகர் விஜய் இன்று திடீரென தனது கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தனது கட்சி பெயரை விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி ” தமிழக வெற்றி கழகம்” என தனது கட்சிக்கு விஐய் பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தல்.? 2026 தேர்தல் தான் இலக்கு.! விஜய் அறிவிப்பு.!
“தமிழக வெற்றி கழகம்” கட்சி தலைவராக கடந்த 25-ஆம் தேதியே பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றி கழகம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.