இனி தமிழக அரசியல் களத்தில் பாஜக கூட்டணி vs திமுக கூட்டணி தான் – மாநில தலைவர் அண்ணாமலை

தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று சென்னை கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜகவின் திரளான தொண்டர்களின் கூட்டம் இன்று பேராதரவுடன் ஒரு கடல் போல் பொங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியால் 20 வருடங்கள் கழித்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம்.
நான்கு என்பது 150 ஆக மாற வேண்டும், நாம் மாற்றி காட்ட வேண்டும். ஒற்றை தலைமையோ, குடும்ப அரசியலோ இல்லாத ஒரே கட்சி பாஜக தான். நம் கட்சியில் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம். பாஜகவில் தமிழகத்திலும், நாடெங்கிலும் தகுதி உள்ளோர் தலைமை பொறுப்பிற்கு தக்க தருணத்தில் சென்றியிருக்கிறார்கள். தலைமை இடம் என்பது மக்களுக்கு சேவை செய்ய வழங்கப்படும் பொறுப்பு.
70 நாள் ஆட்சியில் நாம் திமுகவிடம் காண்பது வெறும் தவறான வாக்குறுதிகளும், பொய்யுரைகளும் மட்டுமே, செய்ய முடியாததை செய்வோம் என கூறுவது, சொல்ல வேண்டிய தகவல்களை மக்களிடம் மறைப்பது தேவையற்ற வார்த்தைகளை கொண்டு மக்களை திசை திருப்புவது, பிரிவினைவாதத்தை தூண்டுவது என்று தவறான எல்லாவற்றையும் திமுக செய்து வருகிறது. திமுகவுக்கு வாக்கு நாணயம் இல்லை என்றும் இருக்கப்போவது எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக திமுகவை போல் பொய் பேசுபவர்கள் கிடையாது. நாம் சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. தமிழக மக்களின் அன்பையும், நம்பிக்கையும் பாஜக கூட்டணி பெற்று, வரும் காலங்களில் பிரிவினைவாதிகளையும், பொய் பேசுபவர்களை விரட்டியடிக்கும்.
தமிழ்நாட்டை உண்மையான வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்று தமிழகத்தை காப்போம். ஒவ்வோர் தமிழரின் முன்னேற்றமே இந்நாட்டின் முன்னேற்றம். அதுவே நம் லட்சியம், ஒன்று கூடி உழைப்போம், தமிழர் வாழ்வில் சிறப்பினத்தை கொண்டு சேர்ப்போம் என்று கூறி, ஒற்றுமை இன்றி ஒன்றுமில்லை, மக்கள் நலமின்றி நமக்கு வேறு எண்ணமில்லை என தெரிவித்துள்ளார்.