“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!
தற்போது தேமுதிக 2.O தொடங்கியுள்ளது. இதுவரை சத்ரியனாக இருந்தோம். இனி சாணக்கியனாக இருப்போம் என விஜய பிரபாகரன் பேசினார்.

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை நியமித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
மேலும், கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் என தேமுதிகவின் முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் . மேலும், கடலூரில் வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாடு நடைபெறும் என செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனுக்கு அணிவித்தார். அதன் பிறகு பேசிய விஜய பிரபாகரன், தற்போது தேமுதிக 2.O தொடங்கி உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
மேலும், தமிழ்நாட்டில் முதன் முதலில் பேன்ட் போட்ட அரசியல்வாதி நான்தான், எனக்கு பிறகே, மற்ற அரசியல்வாதிகள் பேன்ட் (Pant) போட துவங்கினர்.
தற்போது நமக்கான காலம் துவங்கியுள்ளது. இனி வரும் மேடை பேச்சுகள் எல்லாம் வேற மாதிரி இருக்கும். இவ்வளவு நாட்கள் நாம் எல்லோரும் சத்ரியனாக இருந்தோம், ஆனால், இனி வரும் காலங்களில் சாணக்யனாக இருக்க வேண்டும்.
இனி தேமுதிக வெற்றிபெற விவேகத்துடன் செயல்பட வேண்டும். கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் நமது தேமுதிக மாநாட்டில் 10 லட்சம் பேர் கூட வேண்டும்.” என தேமுதிக இளைஞரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.