நவ.9 புதிய காற்றழுத்த பகுதி..தமிழ்நாட்டில் 14ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வடகிழக்கு பருவமழை கடந்த 29-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த தாற்றலுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்று அடுத்த 4 நாட்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.