பணிக்கு வராத ஊரக துறை அலுவலர்களுக்கு நோட்டீஸ்…சேலம் கலெக்டர் தகவல்…!!
விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அரசு செயலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைபடி, போராட்ட நாட்களில் அனைவரது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றார். விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.