ராமேஸ்வரம் கோயிலில் நகைகள் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு நோட்டீஸ்.!
ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கும் நகைகளின் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு அபராத தொகையுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்மனுக்கு மாசி மாதம் திருவிழா, சித்திரை மாத திருவிழா, ஆடி மாத திருவிழா ஆகியவற்றிற்கு குருக்களால் அணிவிக்கப்படும் ஆபரண நகைகளை திருவிழா முடிந்த உடன் கோயில் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பத்திரமாக குருக்களே வைத்து விடுவார்கள். 40 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு நகை மதிப்பீட்டாளர்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, அம்மனுக்கு அணிவிக்கும் ஆபரண நகைகளின் எடை குறைவாக உள்ளதாக கூறப்பட்டதை அடுத்து அபராத தொகையுடன் விளக்கம் கேட்டு நகைகளை அம்மனுக்கு சாத்தும் குருக்கள் மற்றும் ஓய்வு பெற்ற 30 குருக்களுக்கும் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிக்கப்பட்டுள்ள அபராதம் 5,000 முதல் 10,00,000 வரை இருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.