தொழிலாளர்களுக்கு எதுவும் நேராது; பீகார் முதல்வரிடம் ஸ்டாலின் உறுதி.!
வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் எங்கள் தொழிலாளர்கள் என, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வரிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று தவறான வீடியோ பரவியதையடுத்து இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் திருப்பூர் ரயில் நிலையத்தில் சஞ்சய் குமார் என்ற பீகார் நபர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு வட மாநிலத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சில வீடியோக்களும் வெளியானது, இதனையடுத்து தொழிலாளர் நிலை பற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல்வர் அறிவித்திருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் இது குறித்து பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் தான், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பவர்கள், அவர்களுக்கு இங்கு எதுவும் நேராது என்று பீகார் முதல்வரிடம், ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.