தேர்வுக்குழுவுக்கு அனுப்பவில்லை,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? ஸ்டாலின் அறிக்கை
வேளாண் மண்டல மசோதாவை தேர்வுக்குழுவுக்கு ஏன் அனுப்பவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாத, திருச்சி-கரூர்-அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்காத அரைக்கிணறு தாண்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது இவ்வரசு. மக்களை ஏமாற்றுவதே இவர்கள் கொள்கை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்ஜெட் தொடரில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததற்கு பிராயச்சித்தம் தேடிட, தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடக்காது என அறிவிப்பீர்களா என்ற என் கேள்விக்கு ஆளுவோரிடம் பதில் இல்லை. ஒட்டுமொத்தப் பாதிப்புகள் குறித்து பட்டியலிட்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடக்காது என்ற உறுதியை அளிக்க ஆளும் தரப்பு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.