சென்னை மெரினாவில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : இது அவுங்க ஊர் ‘பொங்கல்’ திருவிழா!
வடமாநிலங்களில், சத் பூஜை எனும் சூரிய பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக ஏராளமான வடமாநிலத்தவர்கள் சென்னை மெரினாவிலும் குவிந்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல் (தை 1) கொண்டாடப்படுகிறது. அதே போல, வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் விதமாக சத் பூஜையானது (Chhat Puja) ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொண்டாப்படுகிறது.
முதலில் பீகார், உத்திர பிரதேசம், நேபாளம் ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகையானது தற்போது பெரும்பாலான வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சென்னை பகுதியில் வசிக்கும் வடமாநில மக்கள் இன்று அதிகாலை முதலே சென்னை மெரினாவில் குவிய தொடங்கினர்.
தீபாவளி முடிந்த 6ஆம் நாள் இந்த சத் பூஜை தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. நஹா கா எனும் முதல் நாள் பூஜையை தொடர்ந்து, கர்னா எனும் இரண்டாம் நாள் புஜையில் மக்கள் விரதம் இருக்க தொடங்குகின்றனர். மூன்றாம் நாள் அருகாமையில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று சூரிய அஸ்தமனத்தை வணங்குகின்றனர்.
அடுத்த நாள் காலையில், சூரிய உதயத்தின் போது பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள், பழங்கள் படைத்து சூரியனை மக்கள் வணங்குகின்றனர். அதற்காக இன்று காலை முதலே சென்னையில் வசிக்கும் வடமாநிலத்து மக்கள் மெரினாவில் குவிந்து சூரிய உதயத்தை வணங்கி வருகின்றனர்.