தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!
நவ.5 ல் தெ.மே வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கொடுத்த தகவலின் படி, நவம்பர் 2024 இல் நாடு முழுவதும் மாதாந்திர மழைப்பொழிவு சாதாரணமாக இருக்கும். இந்த மாதம் வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழை பெய்யக்கூடும்.
அதைப்போல, தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும்.இயல்பிற்குக் குறைவான மழை பெய்யக்கூடிய வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதில், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதியை நெருங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது.