டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்கத் துணை போகும் அதிகாரிகள் யாரும் தப்பி ஓடிவிட முடியாது- முக.ஸ்டாலின்
தரம் பற்றிய கவலையின்றி, ‘டெண்டர்களில் கமிஷன்’ என்பதே அதிமுக அரசின் ஒரே நோக்கம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ. 336 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்தது.இதனால் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இதனிடையே அமைச்சர் தங்கமணி மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,கட்டடம் இடியவில்லை, அதிகாரிகளே இடித்தனர் என்றும் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் ,”நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கூரை சரிந்தது – அதிமுக ஆட்சியின் ஊழலை அம்பலமாக்கியுள்ளது;திமுக ஆட்சி அமைந்ததும் முறைகேடான டெண்டர்கள் ரத்து செய்யப்படும் – ஊழல் குற்றவாளிகள் தப்பமுடியாது”.ஆகவே புதிய மருத்துவக் கல்லூரி – மருத்துவமனைகள் போன்றவை கட்டுவதற்கு விடப்பட்ட டெண்டர் பணிகளில் நடக்கும் முறைகேடுகள் மட்டுமல்ல – கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு – வேலை செய்யாமலேயே கொடுத்த கமிஷன்கள், டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திலும் முழு விசாரணை நடத்தப்பட்டு – குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அந்த நடவடிக்கையிலிருந்து எந்த அ.தி.மு.க. அமைச்சரும் – தேர்தல் நிதி திரட்ட இது போன்ற டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்கத் துணை போகும் அதிகாரிகள் யாரும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ரூ.350 கோடி டெண்டர்; ஆனால் கட்டும் போதே இடிந்து விழுகிறது நாமக்கல் மருத்துவக் கல்லூரி!
தரம் பற்றிய கவலையின்றி, ‘டெண்டர்களில் கமிஷன்’ என்பதே அதிமுக அரசின் ஒரே நோக்கம்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் கமிஷன் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவர். எச்சரிக்கை! pic.twitter.com/VkCzkYwRXF
— M.K.Stalin (@mkstalin) October 31, 2020