கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் – திமுக முக ஸ்டாலின் அறிக்கை.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, அரசு சில தளர்வுகளுடன் மக்களை வெளியே செல்ல அனுமதித்து வருகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். அதிலும், கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த கட்டணம் செலுத்திய முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதல்வரின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்றும் கேம்பஸ் இண்டர்வியூவில் வழங்கிய வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதல்வரும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும், ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை என்று தெரிவித்துள்ளார்.
“தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்;
கேம்பஸ் இண்டர்வியூவில் வழங்கிய வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்த வேண்டும்”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/hDlaXA1080#DMK pic.twitter.com/G9256R5rrJ
— DMK (@arivalayam) August 29, 2020