வேட்பு மனு விவகாரம்: ஒ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் வேட்புமனு விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்செல்வன் தொடர்ந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், நாடாளுமன்ற எம்பியுமான ஒ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அப்போது, அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார் என்றும் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்தத் தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல, எனவே இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ரவீந்திரநாத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 6ம் தேதி, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்து, இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால், ரவீந்திரநாத் எம்.பி பதவியை தொடர்கிறார்.
இந்த நிலையில், தேர்தல் வேட்புமனு விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்செல்வன் தொடர்ந்த வழக்கில் ஒ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேட்பு மனுவில் உண்மை விவரங்களை மறைத்த ஒபி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவித்தால் மட்டும் போதாது. அவர் செய்தது கிரிமினல் குற்றம் எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
அடுத்த 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என தங்க தமிழ்ச் செல்வன் தொடர்ந்த மனுவில் கூறியுள்ளார். தேர்தல் விவகாரம் புதிய கோணத்தில் அணுகப்பட்டிருப்பதாகவும், இந்த மனுவில் இருந்து புதிய விஷயத்தை தாங்கள் தெரிந்து கொண்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், தங்கதமிழ் செல்வன் மனு மீது பதிலளிக்க ஒ.பி ரவீந்திரநாத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.