தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை – முதலமைச்சர் உரை
பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான், பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம் என முதலமைச்சர் உரை.
பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலகத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். பெரியாரின் சுயமரியாதையை பிரச்சாரப்படுத்தும் விதமாக 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் 95 அடி உயர பெரியாரின் வெண்கல சிலை, பெரியாரின் வரலாற்றை விளக்கும் வகையில் ஒளி, ஒலி காட்சிகளுடன் கூடிய அருகாட்சியகம் மற்றும் மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளன. மேலும், கண்காட்சி, கேளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய மிகப்பெரிய பூங்காவாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெரிய உலகம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு, இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை. பெரியாரின் சிந்தனைகளை உலகில் பல்வேறு மொழியில் வெளியிட உள்ளது. பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.
தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை, பெரியார் திடலுக்கு வந்தாலே புத்துணர்சி வருகிறது. பெரியார் திடல் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே சமூக நீதிக்கான இடம். தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என்றும் உரையாற்றினார்.