மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் இல்லை – போக்குவரத்து காவல்துறை விளக்கம்.!
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தபோதும், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கனமழை எதிரொலியாக சென்னை வேளச்சேரி மேம்பாலங்களில் 2வது நாளாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
வேளச்சேரி மட்டுமின்றி பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் பொதுமக்கள் தங்களது வாகனத்தை பார்க் செய்ய தொடங்கினர். இதனையடுத்து, மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியதோடு, அபராதமும் விதித்தனர்.
இருந்தாலும், அதை பெரிய அளவில் பொருட்படுத்தாமல் “லட்ச கணக்கில் செலவு பண்றதுக்கு பதிலாக இந்த ரூ.1,000 அபராதத்தை கட்டிடலாம்” என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். தற்பொழுது, போக்குவரத்து இடையூறாக வாகனம் நிறுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கப்படாது எனவும், அபராதத்தை கைவிடுவதாகவும் தாம்பரம் காவல் ஆணையரகம் உறுதியளித்துள்னர்.
அவசர காலங்களில் வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக பாதுகாப்பான இடம் குறித்து காவல்துறையிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் உதவி தேவைபட்டால் போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும், கார்களுக்கு அபராதம் தொடர்பான புகார்களுக்கு South & East 044-23452362 v North & West 044-23452330 எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை – சென்னை போக்குவரத்து காவல்துறை!#ChennaiRains | #TrafficPolice pic.twitter.com/UvCtVtHpPF
— Dinasuvadu (@Dinasuvadu) October 15, 2024