தூத்துக்குடி மக்களே.. மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியே வர வேண்டாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு மேல் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புரேவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு முக அருகில் நிலைக் கொண்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 3 மணிநேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் எனவும், அப்பொழுது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ராமநாதபுரம், பாம்பன் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று மாலை 6 மணிக்கு மேல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பற்ற பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாமிற்கு செல்லுமாறு அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, கனமழை பெய்யும் காரணமாக கடற்கரை, நீர்நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்லவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.