முதலமைச்சரை யாருமே மதிப்பதில்லை! தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு – ஜெயக்குமார் பேட்டி
அதிமுகவில் அந்த 3 பேர மட்டும் மறுபடியும் சேர்க்கவே மாட்டோம் என்று ஜெயக்குமார் அதிரடி.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டார். குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை, அமளிப் பூங்காவாக இருக்கிறது. பெட்ரோல் குண்டு கலாசாரம் இன்றைக்கு தலை தூக்கியிருக்கின்றது.
கொலைகளாக நடந்து கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. முதலமைச்சரை யாருமே மதிப்பதில்லை. அமைதியை ஏற்படுத்தித் தருவது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையிலிருந்து முதல்வர் பின்வாங்கி விட்டார். இதனால் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் சாதாரணமாக நடைபெறுகின்றன என்று சாடினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இந்த 3 பேரை அதிமுகவில் மறுபடியும் சேர்க்கவே மாட்டோம் என்றார். மேலும், உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக தெரிவித்தார்.
என்னோட வரிப்பணமும் வேஸ்ட் ஆகுது, தெண்ட செலவு. ஊழலில் பலர் சிக்குவார்கள் என்பதால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவில் வைத்துக்கொண்டு பாதுகாக்கிறது திமுக அரசு. எவ்வளவு நாள் மூடி மறைக்க முடியும் என்றும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து எனவும் தெரிவித்தார்.