யாரும் பயப்படாதீங்க! நாடு முழுவதும் எமர்ஜென்சி அலர்ட்! குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை!
நாட்டில் பேரிடர் காலங்களில், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் திட்டத்தின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்பு அளிப்பது தொடர்பாக நாடு முழுவதும் இந்த சோதனை தொடங்கியது. அதன்படி, மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இன்று செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை நடத்தப்படுகிறது.
சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாய எச்சரிக்கை ஒலியுடன் அனைவரது செல்போன்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சிதான் என்றும் யாரும் பயப்படவேண்டாம் எனவும் கூறியுள்ளனர். இந்த எமர்ஜென்சி அலர்ட் அனைத்து மொழிகளிலும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அலர்ட்டில், இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பம் ஆகும். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தொலைத்தொடர்பு துறை இணைந்து ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதாவது, ஒரு செல்போன் டவரின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கு இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக, கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) இருக்கும் நேரத்தில், பொதுப் பாதுகாப்புச் செய்திகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க செல் ஒலிபரப்பு எச்சரிக்கை பயன்படுத்தப்பட உள்ளது.