“என் மீது சேற்றை வாரி இறைக்க விட்ருவாங்களா?” அமைச்சர் பொன்முடி மறுப்பு!
என்மீது யாரும் சேற்றை வாரி இறைக்கவில்லை. அது தவறுதலாக எங்கள் மீது பட்டுவிட்டது. இதனை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் கனமழையால் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்திக்க சென்ற போது அவர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட சில கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் பொன்முடி இருவேல்பட்டு பகுதிக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது சட்டையிலும், அதிகாரிகள் சிலரது சட்டையிலும் சேர் வாரி இறைக்கப்பட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு அமைச்சர் மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர் என செய்திகள் வெளியாகியது. ஆனால் அமைச்சர் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அவர் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” என் மீது சேற்றை வாரி இறைத்ததாக சிலர் வேண்டுமென்றே இதனை பெரிதுபடுத்தி அரசியலாக்க நினைக்கின்றனர். பொதுமக்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சிலர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த முயன்றனர்.
அதனை சரி செய்வதற்கு நாங்கள் நேரில் சென்றோம். அப்போது எப்படியோ எங்கள் உடைகள் மீது தவறுதலாக சேறு கறை பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகும் நாங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்றோம். மக்கள் குறைகளை கேட்டறிந்தோம். என் மீது சேற்றை வாரி இறைக்க விற்றுவார்களா? இதனை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை. ” என அமைச்சர் பொன்முடி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.