இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!
தவெக தலைவர் விஜய்க்கு, Y பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், நடைமுறைக்கு வந்தது

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தை 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரப்படுத்தி வருவதால், அவரது பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் தனியார் பாதுகாவலர்களை (பவுன்சர்கள்) பயன்படுத்தி வந்தார், ஆனால் இப்போது மத்திய அரசின் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அவர் செல்லும் இடங்களில் நான்கு அளவிலான போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் தொடர்ந்து கூட இருப்பார்கள். இந்த பாதுகாப்பு நடவடிக்கை, விஜய் அவர்களின் பொது வாழ்க்கையில் புதிய கட்டத்தை சுட்டிக்காட்டுகிறது.
Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன ?
இந்த பாதுகாப்பு நிலை, X, Y, Z, SPG (Special Protection Group) போன்ற பல்வேறு பிரிவுகளில் ஒன்றாகும், இதில் Y என்பது நடுத்தர அளவிலான அச்சுறுத்தலுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. Y பிரிவு பாதுகாப்பு (Y Category Security) என்பது இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளில் ஒன்று. மேலும் இது பொதுவாக அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய நபர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழங்கப்படுகிறது.
Y பிரிவு பாதுகாப்பின் கீழ், பொதுவாக ஒரு நபருக்கு சுமார் 8 முதல் 11 பாதுகாப்பு பணியாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சில சமயங்களில் உள்ளூர் காவல்துறையின் உதவியும் அடங்கும். இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டுமே பொருந்தும்.