அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது – சசிகலா
உரிய நேரத்தில் நிச்சயமாக அதிமுக தலைமை செயலகம் செல்வேன் என சசிகலா பேட்டி.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுகவில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அதிமுக விதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர் என பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.கே.சசிகலா அவர்கள், உரிய நேரத்தில் நிச்சயமாக அதிமுக தலைமை செயலகம் செல்வேன். அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது. எதேச்சதிகாரமாக செயல்பட்டால் தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள். அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.