இனி அதிமுக சார்பில் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் – ஓபிஎஸ், இபிஎஸ் பரபரப்பு அறிக்கை!!

Default Image

விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது மனதிற்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், எம்.ஜி.ஆர். அவர்களால் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும், வாழ்ந்து மறைந்த அம்மா அவர்களும் அதே எண்ணத்தோடு இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் வழிநடத்தி இருக்கிறார்கள். அதைப் போலவே, அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் சிறிதும் தடம் மாறாமல் அரசியல் களத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம்.

மக்களின் அடிப்படைரத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்ற போது, அதைப்பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

எனவே, ஊடக விவாதங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்கமாட்டார்கள் என்பதையும், எங்களை பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அன்புகூர்ந்து கேட்டுக் கொள்கிறோம். இந்த முக்கியமான விவகாரத்தில், தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களின் மேலான ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்