தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை – அமைச்சர்
63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்டது. உலகளவில் இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை நோய் 8,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குரங்கு அம்மை நோய் இந்தியாவில் நுழையாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துகிறது தமிழக சுகாதாரத்துறை. இந்த நிலையில், குரங்கு அம்மை எதிரொலி காரணமாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு குறித்து இன்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது, இந்தியாவில் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கேரள வழிகளான 13 இடங்களில் பரிசோதனை செய்யபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை. நோய் கண்டறிவதற்கான ஆய்வகம் சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.