தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம். மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன. ஆனால். மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து 6.93 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.