நோ பார்க்கிங் விவகாரம்: காவலாளியை தாக்கிய 4 பேர்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!
மாமல்லபுரத்தில்"நோ பார்க்கிங்" பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என தடுத்த காவலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில், தாக்குதல் நடத்திய 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில் வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என்கிற தோரணையில் பேசி, காவலரையும் தாக்கிய சம்பவம் காரை பறிமுதல் செய்து அந்த நான்கு பேர்களையும் கைது செய்யவேண்டும் எனப் புகார்களை எழுப்பக் காரணமாக அமைந்தது.
வைரலான வீடியோ
இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஒன்று வருகிறது, அப்போது அங்கு பணியிலிருந்த காவலர் இது நோபார்க்கிங் இங்கு கார நிறுத்தக்கூடாது என்பது போலக் கூறுகிறார். இதனால், காவலருடன் 4 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு காரில் இறங்கிய பெண் ஒருவர் வேகமாகக் கன்னத்தில் அறைந்தார்.
நோ பார்க்கிங்கிற்குள் செல்லக்கூடாது என தடுத்த செக்யூரிட்டி
#Mamallapuram உள்ள ஐந்து ரதங்கள் அருகே, வாகன நிறுத்துமிடத்திற்கு தங்கள் காரை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கேட்டபோது, பெண் சுற்றுலாப் பயணிகள் தனியார் பாதுகாப்புப் பணியாளர் மீது தாக்குதல். #Noparking #Security #Attack pic.twitter.com/E5Pf6TrXkr— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 22, 2024
அவர் தாக்கிய பிறகு, காரில் இருந்த மற்ற 3 பேரும் இறங்கி ஒன்றாக இணைந்து காவலரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். இந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தடுக்கவும் முயலாமல் தங்களுடைய போனில் வீடியோவும் எடுத்தனர்.
போலீசார் வலைவீச்சு
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி காவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யவேண்டும் எனக் கண்டனங்கள் எழுந்த நிலையில், காவல்துறை இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளனர். வீடியோ காட்சிகளை வைத்து, அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.
அதைப்போல, காவலரைத் தாக்கிய 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேர் மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் வெளியாகும். அவர்கள் கைதாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.