ED ரெய்டு : “மடியில் கனமில்லை., வழியில் பயமில்லை” ஆதவ் அர்ஜுனா விளக்கம்.!
அமலாக்கத்துறை சோதனை எனது பெயரில் நடைபெறவில்லை. நான் எந்த தொழிலும் தற்போது ஈடுபடவில்லை என விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவையில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதேபோல, அசாம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது, விசிக துணை பொதுச்செயலாளரும், மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் இந்த சோதனை நேற்று மாலை வரை நடைபெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு சிலர் இணையதளம் வாயிலாக ஆதவ் அர்ஜுனாவையும், அமலாக்கத்துறை சோதனையும் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து தற்போது தனது டிவிட்டர் ஆதவ் அர்ஜுனா பதிவிடுகையில், “அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே, நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலும் இல்லை.
அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல. அமலாக்கத்துறையின் சோதனை ஆணை எனது பெயரில் இல்லை. அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும் இல்லை என்பதை ஊடகங்களுக்கும், தோழர்களுக்கும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இச்சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் சட்டரீதியாக அளிக்கப்பட்டு சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த சோதனை குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பத்திரிக்கையாளர் அல்லாத நபர்கள், அதிகார வர்க்கத்திற்கு விலைபோனவர்கள் மற்றும் சித்தாந்த ரீதியாக எங்களுடன் முரண்பட்டவர்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகளும், உண்மைக்கு மாறான தகவல்களும் கடந்த இரண்டு நாட்களாகப் பரப்பப்பட்டு வருகிறது.
“என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை.” தேர்தல் அரசியலில் பேரறிஞர் அண்ணா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதும், எடுத்துக்கொண்ட கொள்கைகளில் கவனம் சிதறாமல் வெற்றி பெற்றதை போல புதிய அரசியல் பாதையை உருவாக்குவோம்.” என ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
செய்திக் குறிப்பு
எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாகக் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய்… pic.twitter.com/K7uJqGl6gG
— Aadhav Arjuna (@AadhavArjuna) November 16, 2024